சிவவாக்கியர் வாழ்க்கை வரலாறு – பாகம்4

காட்டிற்க்கு மூங்கில் வெட்டச் சென்றிருந்த அப் பெண்ணின் பெற்றோரும் பிறரும் தங்கள் இருப்பிடத்துக்கு வந்து சேர்ந்தனர். தங்கள் இருப்பிடத்தில் ஓய்வெடுத்தபடி இருந்த சிவவாக்கியரைக் கண்டதும் அவர்கள் பயந்து, சற்று தொலைவில் இருந்தபடியே அவரைப் பணிந்து வணங்கினர்.

இவ்வாறு பணிந்து நின்ற குறவர் குலத்துப் பெண்ணின் பெற்றோரும் மற்றவர்களும் சிவவாக்கியர் தங்கள் இருப்பிடம் தேடி வந்தது தாங்கள் செய்த தவப்பயனே என்று வியந்து அவர் வந்த நோக்கம் அறிந்து கொள்ள வேண்டினர். அதற்கு சிவவாக்கியர் தாம் அப்போதுதான் உணவு அருந்தியதாகவும், தவம் இயற்றும் தமக்குத் துணையாக ஒரு பெண்ணைத் தேடிக் கொண்டு வந்ததாகவும், தாம் கூறியவற்றைக் கேட்டு பெண்களும், மற்றவர்களும் தம்மை ஏளனம் செய்ததாகவும், பொறுமையில் பூமா தேவியை ஒத்திருக்கும் அவர்கள் குலப் பெண்ணோ தாம் வேண்டியதை மறுப்பேதும் கூறாது செய்து கொடுத்ததாகவும், அதனால் அவளைத் தமக்கு குறவர்குல மக்கள் மணம் முடித்துத் தர வேண்டும் என்றும் அவ்வாறு செய்து கொடுப்பதும், மறுப்பதும் அவர்களது விருப்பம் என்றும் கூறினார்.

அவரது கூற்றை கேட்ட அப்பெண்ணின் பெற்றோரும், மற்றவர்களும் தங்கள் குலத்துப் பெண்ணை அவருக்கு மணம் முடித்துத் தருவது தாங்கள் செய்த புண்ணி்யம் என்றும், அவ்வாறு செய்து கொடுப்பதென்றால், சிவவாக்கியர் தங்களுடனேயே வாழ்ந்திட வேண்டும் என்று தயக்கத்துடன் கூறினர். அவர்கள் இட்ட நிபந்தனையோடு கூடிய வேண்டுகோளுக்குச் சிவவாக்கியர் சம்மதித்தார். சிவவாக்கியருக்கும் குறவர் குலக் கன்னிக்கும் இனிதே திருமணம் நடந்து முடிந்தது. தம் குருநாதர் இட்ட கட்டளைப் படியே தமது இல்லறம் அமைந்தது சிவவாக்கியருக்கு மனநிறைவினைத் தந்தது.

இல்லற வாழ்க்கையில் தம் மனைவியோடு சிவவாக்கியர் ஈடுபட்ட போதும், அவர் தமது தவத்தைக் கை விடவில்லை. அவரது மனைவியும் அவரின் தவத்துக்குத் தன்னால் எந்த ஒரு இடையீடும் நேராதபடி நடந்து கொண்டாள். இவ்வாறு இல்லற நெறி என இரண்டிலும் ஈடுபட்டுவந்த சிவவாக்கியர் வெகு விரைவில் அக்குறவர் குலத்தோரின் தொழிலான மூங்கில் கூடை, முறம் முடைதல் போன்றவற்றையும் கற்றுக் கொண்டார். இதனால் அவரது இல்லற வாழ்க்கை சிரமமின்றி நடந்தது.

ஒரு நாள் சிவவாக்கியர் தமது தொழிலுக்காக மூங்கில்களை வெட்ட வேண்டி காட்டுப் பகுதிக்குச் சென்றார். அங்கிருந்த பழமையான மூங்கிலை அவர் வெட்டியதும் அதிலிருந்து தங்கத் துகள்கள் பொடிப் பொடியாகச் சிதறிக் கீழே விழுந்தது. அதைக் கண்டதும் சிவவாக்கியர் திகைத்தார். உடனே அவர் இறைவனை நோக்கித் துதிக்கலானார். தாம் முக்தியை வேண்டிக் கொண்டிருக்கும் போது, அதனைத் தமக்கு இறைவன் அருளாது ஆட்டைக் காட்டி வேங்கையைப் பிடிக்க முயல்வதைப் போன்று இந்தத் தங்கத் துகள்களைத் தமக்குக் காட்டித் தம்மை மதிமயங்கச் செய்வது நியாயமோ….. என்றும், எப்படி வாழ வேண்டும் என்ற நெறியை அறியாதோர் சிதறி விழும் இந்தத் தங்கத் துகள்களைக் கண்டு மதிமயங்கக் கூடும். ஆனால் உழைத்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் வாழ வேண்டும். அதுவே சிறந்த நெறி எனவும், இவ்வாறு ஒருவனிடம் செல்வம் எதிர்பாராது அதிகமாகுமானால் அவனது கவலைகளும் அதிகமாகிடுமே, என்று பயந்து இறைவனிடம் முறையிட்டபடியே சிறிது தொலைவுக்கு ஓடிச் சென்று மூங்கிலிலிருந்து கீழே சிதறி விழும் தங்கத் துகள்களை பயந்த படியே பார்த்தார்.

[fbcomments][fbcomments url="http://peadig.com/wordpress-plugins/facebook-comments/" width="600" count="off" num="0" countmsg="wonderful comments!"]

Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us
This site is protected by WP-CopyRightPro