சிவவாக்கியர் வாழ்க்கை வரலாறு – பாகம்1

தாம் பிறக்கும் போதே ‘சிவ சிவ’ என்று உச்சரித்தபடியே பிறந்தமையால் இவரை சிவாக்கியர் என்று அழைத்ததாகக் கூறுவர். இவர் கால தத்துவம், மகா தத்துவம் முதலானவற்றைத் தம் இளம் வயதிலேயே நன்கு உணர்ந்தவர். இவரது பாடல்கலை சரியாக உணராத பலர் இவரை நாத்திகர் என்கின்றனர். இவர் பாடிய

நட்ட கல்லை தெய்வம் என்று புட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொன என்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ

என்ற பாடலே பலர் இவரை நாத்திகர் என்று கூறக் காரணமாகும். இப்பாடலின் பொருளை நன்கு உணர்ந்தால் இவர் நாத்திகர் அல்லர் என்ற உண்மை புரிய வரும். அதாவது தரையில் நட்டு வைத்திருக்கும் உணர்ச்சிகள் ஏதுமற்ற கருங்கல்லை தெய்வ வடிவங்களாக வடித்து அதன் மீது பலவித பூக்களைச் சாற்றியும் பலவித மந்திரங்களை மொண மொண என்று முணுமுணுத்தவாறு அத்தெய்வ வடிவைச் சுற்றிச் சுற்றி வந்து வணங்குவதை அத்தெய்வ வடிவம் அறிந்திடுமோ அல்லது அந்தத் தெய்வ வடிவம் உன்னிடம்தான் பேசிடுமோ…. எப்படி கறி சமைக்கப் பயன்படுத்தும் சட்டுவம் கறியின் சுவையை அறியாதோ அதுபோன்றேதான் நீ வணங்கி வழிபடும் வழிபாடும் என்று மட்டுமே பொருள் கொள்கிறார்கள். ஆனால் அந்த பாடலில் இருக்கும் ஒரு வரியை அவர்கள் உணரவில்லை. அது நாதன் உள்ளிருக்கையில் என்பதே ஆகும். சிவ வாக்கியர் ஒரு போதும் கடவுள் இல்லை என்று கூறவே இல்லை. இவ்வாறு நட்டு வைத்த கல்லை தெய்வம் எனக் கருதி வழிபடுவதை விட எல்லாம் வல்ல இறைவனான அந்த நாதன் உன்னுள்ளேயே உள்ளான் என்பதை நீ உணரவேண்டும் என்பதே அவர் இப்பாடலில் கூறிய கருத்தாகும். இதனை நன்கு உணர்ந்தால் அவர் நாத்திகர் என்ற வாதம் தானே விலகிடும்.

காசியம்பதியின் புகழைப் பற்றி அன்று தொட்டு இன்று வரைப் போற்றிக் கூறாதோர் எவருமே இல்லை. அத்தகைய பெருமையை உடைய காசியம்பதி பற்றிச் சிவாக்கியரும் கேள்விப்பட்டு அங்கு சென்று காசி விஸ்வநாதரின் தரிசனத்தைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டார். உடனே எத்தயக்கமும் இன்றிப் புறப்பட்ட சிவாக்கியர் பல நாட்களுக்கு பின் காசிக்கு வந்தடைந்தார்.

காசியம்பதிக்குச் சிவாக்கியர் வந்து சேர்ந்த சமயத்தில் அங்கு ஒரு சித்தர் வாழ்ந்து வந்தார். செருப்பு தைக்கும் தொழிலைச் செய்து வந்த அச்சித்தர் தன் மூச்சுக் காற்றினைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவர். பிராணயாம வித்தைகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர்.

நற்குணங்கள் பல பெற்ற அச்சித்தர் பெருமானை அறிந்தோர் அவரைப் போற்றி வணங்கி வந்தனர். ஆனால் அவரது பெருமைகளைப் பொறுத்திடாத துன்மார்க்கர் சிலர் அவரை இகழ்ந்து பேசியதுடன் அவர் செய்து வந்த தொழிலையும் இழிவாகப் பேசி வந்தனர். ஆனாலும் அவர், தமக்குக் கிடைத்த பெருமைகளுக்காக மகிழ்ந்திடவும் இல்லை, தூற்றுதலுக்காக வருந்தவும் இல்லை. மேலும் அச்சித்தரது நோக்கம் தனக்கு ஓர் நல்ல சீடனையே எதிர்பார்த்துக் கொண்டிருப்பதுதான்.

சித்தர் பெருமானின் புகழ் காசியம்பதி நகரை வலம் வந்த சிவவாக்கியரை எட்டியதுய அவரைக் கேவலம் செருப்பு தைப்பவர்தானே என்று இழிவாகக் கருதாது அவர் இருக்கும் இடத்தை அடைந்தார். அவரைக் கண்ட உடனே சிவவாக்கியர் அவருடைய மகிமையை மனதார உணர்ந்தார். நல்லதொரு சீடனைத் தேடிய அச்சித்தரும் தம்மை நாடி வந்த சிவவாக்கியரைக் கண்டதுமே, இவர்தான் தாம் தேடிய சீடர் என்பதை உணர்ந்தார். ஆனாலும் சிவவாக்கியரது பக்குவப்பட்ட நிலையை அறிந்திட அவர் விரும்பினார். அதனால் தன் எதிரில் வந்து நின்ற சிவவாக்கியரை அன்போடு வரவேற்றுப் பலகை ஒன்றைச் சுட்டிக் காட்டி அதில் அமருமாறு கூறினார்.

மலரும் அடுத்த பதிவில்………………………..


Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us