வேண்டும் மரண தண்டனை (அக்பர் பீர்பால்)

அக்பர் பீர்பால் கதைகள்அக்பரின் அரண்மனையில் வேலை செய்து கொண்டிருந்த காவலாளி, தான் செய்த தவறுக்காக அக்பரின் முன்னால் நிறுத்தப்பட்டார். மிகவும் கோபப்பட்ட அக்பர் காவலாளிக்கு மரண தண்டனை வழங்குமாறு உத்தரவிட்டார்.

அமைச்சர்களே மன்னர் அளித்த தண்டனையைக் கேட்டதும் அதிர்ந்து போனார்கள்.காவலாளி செய்த சிறு தவறுக்கு மரண தண்டனையா? என்று வேதனைப்பட்டார்கள் அமைச்சர்கள் அனைவரும் பீர்பாலைப் பார்த்தார்.

பீர்பாலால் தான் இந்த தண்டனையை ரத்து செய்வதற்கு அரசருடன் பேசமுடியும் என்பது அவர்களின் எண்ணம்.அரசே அருள் கூர்ந்து நான் சொல்வதை தாங்கள் கேட்க வேண்டும் என்றார் பீர்பால். கேபத்தின் உச்சக் கட்டத்தில் இருந்த அக்பர்.

நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம். நான் கேட்கத் தயாராக இல்லை, நீங்கள் என்ன சொல்வீர்கள் என்பது எனக்குத் தெரியாதா? என்னிடம் நீங்கள் என்ன கேட்டாலும் அதற்கு எதிராகத்தான் நான் முடிவு எடுப்பேன், என்றார் அக்பர் கோபத்துடன்.

அரசே இந்த காவலாளிக்கு உடனே மரண தண்டனையை நிறைவேற்றுங்கள். என்று தான் கூற வந்தேன். என்றார் பீர்பால். திகைப்பில் ஆழ்ந்த அக்பர் பீர்பாலின் சாதுர்யமான பேச்சாற்றலை எண்ணி மகிழ்ந்து பாராட்டியதோடு காவலாளியை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

கெட்ட சகுணம் அக்பர் பீர்பால் கதை

அக்பர், பீர்பாலிடம் பொதுவான விஷயங்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது, பீர்பால் உங்களுக்கு சகுணங்களில் நம்பிக்கை உண்டா? நம் நாட்டில் கெட்ட சகுணம் என்று சொல்லுமளவுக்கு யாரேனும் இருக்கிறார்களா? என்றார்.

அக்பர் பீர்பால் கதைஅக்பரின் கேள்வி பீர்பாலை வேதனை அடைய வைத்தது. அறிவு பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்தும் அரசர். இப்படி மூட நம்பிக்கைகளில் தம் மனதை திசை திருப்புவது, பீர்பாலுக்கு பிடிக்கவில்லை. தம் மனதுக்குள் இருப்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அரசே மற்றவர்கள் கண்டு வெறுக்கும்படியான கெட்ட சகுனம் மிக்க ஒருவன் இவ்வூரில் வசிக்கிறான், காலையில் யாரும் அவனது முகத்தில் விழித்தாலே அன்றைய பொழுது முழுவதும் ஒரு வாய் சோறு கூட கிடைக்காது, படாத பாடு பாட வேண்டும் என்றார் பீர்பால்.

அப்படிப்பட்ட துரதிர்ஷ்டசாலியை நான் பார்க்க வேண்டும் அரண்மனைக்கு அழைத்து வாருங்கள், அவன் முகத்தில் நான் விழிக்கிறேன் என்ன நடக்கிறது என்று பார்ப்போம், என்று ஆவல் பொங்க கூறினார் அக்பர்.

அடுத்த நாள் இரவு பீர்பால் ஒருவனை அழைத்து வந்தார். அரண்மனையில் தங்க வைத்தார். அக்பர் படுத்துறங்கும் அறையிலேயே அந்த மனிதரை படுக்குமாறும் விடியற்காலையில் அக்பர் எழுந்து கொள்வதற்கு முன் அவன் எழுந்து அக்பர் முன் நிற்க வேண்டும் என்றும் கூறிவிட்டு பீர்பால் போய்விட்டார்.

பொழுது விடிந்தது. அக்பர் எழுந்தார். அவருக்கு முன்னால் அந்த மனிதன் நின்று கொண்டிருந்தான். இவன் முகத்தில் விழித்தால் கெட்ட சகுனம் என்று கூறியதை சோதித்து பார்ப்போம் என்று அந்த மனிதனை நன்றாகப் பார்த்து விட்டு வெளியில் வந்தார். தமது அன்றாட அலுவல்களை கவனிக்க ஆரம்பித்தார். அன்று அரச சபைக்கு நிறைய வழக்குகள் வந்த படியால் ஓய்வு இல்லாமல் தொடர்ந்து பணிகளை தொடர்ந்து கொண்டிருந்தார்.

உணவு உண்ணக் கூட நேரமில்லாமல் பணிகளை செய்வதில் மிகுந்த சோர்வும் சலிப்பும் மேலிட நடந்து வரும்போது காலையில் அந்த மனிதனின் முகத்தில் விழித்தது நினைவுக்கு வந்தது. அவனது முகத்தில் விழித்த படியால் தான் தமக்கு இன்று முழுவதும் சாப்பிடக் கூட முடியாமல் கஷ்டப்பட நேர்ந்தது என்று எண்ணிய படியே காவலாளியைக் கூப்பிட்டார்.
நேற்று, பீர்பால் ஒருவனை அழைத்து வந்து என் அறையில் தங்க வைத்தாரே, அவனை சிறையில் அடைத்து வையுங்கள் நாளை தூக்கில் போடுங்கள் என்று கட்டளையிட்டார் அக்பர் பீர்பாலிடம் அரசர் கூறிய தண்டனையை பற்றி காவலாளிகள் முறையிட்டார்கள். உடனே அக்பரை காண வந்தார் பீர்பால்.

அரசே அந்த கெட்ட சகுனம் பிடித்தவனை தூக்கிலிட உத்தரவு பிறப்பித்துள்ளதாக கேள்வி பட்டேன், என்றார் தயக்கத்துடன்.
பீர்பால் இவனை போன்ற துர்பாக்கிய சாலிகள் இவ்வுலகில் வாழ்ந்து எந்த பயனும் இல்லை இவனால் மற்றவர்களுக்கு கஷ்டந்தான்.

இன்றைக்கு இவன் முகத்தில் முழித்து விட்டு நான் பட்டப்பாடு. இது வரைக்கும் இப்படி கஷ்டப்பட்டதே இல்லை. எல்லாம் இவனால்தான். அதனால் தான் கூறுகிறேன். இவனை தூக்கிலிட்டால் யாருக்கும் எந்த தொந்திரவும் இருக்காது என்று கூறினார் அக்பர்.

அரசே நீதி நியாயம் என்பது அரசருக்கும் ஒன்றுதான். சாதாரண குடிமகனுக்கும் ஒன்றுதான் என்று இதுவரைக்கும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அப்படி இல்லை என்பது இப்பொழுதுதான் புரிகிறது.பீர்பால், நீதி நியாயம் என்பது பொதுவானது தான் அதில் ஏந்த சந்தேகமும் இல்லை.அரசே இரவு முழுவதும் தூங்கிவிட்டு விடியற்காலையில் உங்கள் முகத்தில் தானே விழித்தான், அந்த மனிதன்.ஆமாம் என்றபடி தலை அசைத்தார் அக்பர்.

அரசே விடிந்ததும் நீங்கள் அவன் முகத்தை பார்த்தீர்கள். அதன் பலனாய் இன்று முழுவதும் சாப்பிடக் கூட நேரம் இல்லாமல் கஷ்டப்பட்டீர்கள். அந்த கெட்ட சகுணம் பிடித்தவன் தங்கள் முகத்தில் விழித்தான். உங்கல் முகத்தில் அவன் விழித்தபடியால் என்ன பலன் கிடைத்தது. தூக்கு தண்டனைதான். இப்போது யோசித்துப் பாருங்கள். நீங்கள் அவன் முகத்தில் விழித்தபடியால் உங்களுக்கு மன உளைச்சலும் சோர்வும் சலிப்பும்தான் பலனாக இருந்தது.

உங்கள் முகத்தில் அவன் விழித்திருக்கிறான். அவனுக்கு பலன் தூக்கு தண்டனைதான். இப்போது சொல்லுங்கள் கெட்ட சகுணந் மிக்கவர் யார்? நீங்களா? அவனா? என்று கேள்விக் கேட்டார் பீர்பால். பீர்பாலின் கூற்றில் இருந்த உண்மையைப் புரிந்து கொண்டார். காவலாளியைக் கூப்பிட்டு சிறையில் அடைத்து வைத்திருந்த அந்த மனிதனை விடுதலை செய்ய சொன்னார். தவறை சுட்டிக்காட்டிய பீர்பாலை பாராட்டினார்.

சாமியாரும் ஆயிரம் பொற்காசுகளும் – அக்பர் பீர்பால் கதை

ஏழை தொழிலாளி ஒருவர் காசியாத்திரை போக விரும்பினார். தாம் உழைத்து கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருளை சேர்த்து வைத்து இருந்ததில் செலவுக்கு சிறிது பணத்தை எடுத்துக் கொண்டார். மீதி பணத்தை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நம்பிக்கைக்கு பாத்திரமாக ஒருவரிடம் கொடுத்து வைக்க வேண்டும் என்று நினைத்தார்.அந்த ஊரில் அமைதியாக வாழ்ந்து வந்த சாமியார் ஒருவரை தேடிச் சென்றார் ஏழை தொழிலாளி.

ஐயா… பல வருடமாய் கஷ்டப்பட்டு அக்பர் பீர்பால் கதைகள்உழைத்த பணத்தில் ஆயிரம் பொற்காசுகளை சேர்த்து வைத்திருக்கிறேன். நான் காசியாத்திரை சென்று வரும் வரையில் இந்தப் பொற்காசுகளை தாங்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். திரும்பி வந்த பின்பு தங்களிடம் இருந்து வாங்கிக் கொள்கிறேன். என்றார் ஏழை தொழிலாளி. இதைக் கேட்டதும் சாமியார் பதறிப் போனார்.பொற்காசுகளை என்னிடம் கொடுத்து விட்டுச் செல்வதாக கூறுகிறாயே, இவ்வுலகில் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை எதுவும் இல்லாமல் அணுதினமும் ஆண்டவனை நினைத்துக் கொண்டிருக்கும் எனக்கு இப்படி ஒரு பொறுப்பினை கொடுக்க நினைக்கிறாயே என்றார் சாமியார்.

ஐயா உங்களுக்கு இதில் ஏதும் சிரமம் இருப்பின் தயவு செய்து எனது வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள வேண்டாம்… என்றார் அந்த ஏழை தொழிலாளி.

உன் பொருள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் பொற்காசுகளை பெட்டியில் வைத்து பூட்டி இந்த மரத்தடியில் புதைத்து விட்டு செல் காசி யாத்திரை சென்று திரும்பி வந்த பின்பு உன் பொற்காசுகளை எடுத்துக் கொள் என்றார் சாமியார்.
சாமியாரின் பேச்சைக் கேட்ட ஏழைத் தொழிலாளிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சாமியார் கூறியபடியே பொற்காசுகளை மரத்தடியில் புதைந்து விட்டு காசியாத்திரைக்கு சென்று விட்டார் ஏழைத் தொழிலாளி.

ஒரு மாதம் சென்றது. காசியாத்திரையை முடித்து விட்டு திரும்பியவர் சாமியாரை பார்க்கச் சென்றார்.
நீ வைத்த இடத்தில் பொற்காசுகளை தோண்டி எடுத்து கொள் என்றார் சாமியார். மரத்தடியில் புதைக்கப்பட்டிருந்த இடத்தை தோண்டிய அந்த ஏழை, தான் வைத்திருந்த பெட்டியை காணாமல் பதறிப் போனார். சாமியாரிடம் சென்று அழாத குறையாக சுவாமி… நான் வைத்துவிட்டுப் போன பெட்டியைக் காணவில்லை என்றார்.

அப்பனே நான் தான் முன்பே கூறினேனே. இங்கே வைத்து விட்டு போக வேண்டாம் என்று நான் கூறியதைக் கேட்காமல் வைத்து விட்டு சென்றாய் நான் தியானத்தில் இருந்த போது பொற்காசுகளை யாரோ திருடிச் சென்றிருக்கலாம். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? என்றார் சாமியார். பலமுறை கெஞ்சி கேட்டும் திரும்ப திரும்ப தாம் கூறியதையே கூறினார் சாமியார்.

அடுத்த நாள் பீர்பாலிடம் சென்று நடந்த விஷயங்களைக் கூறினார். அனைத்து விபரங்களையும் கேட்டுக் கொண்ட பீர்பால் ஒரு முடிவுக்கு வந்தார். பொற்காசுகளை சாமியார் தான் எடுத்திருக்க வேண்டும் என்று யூகித்தார்.நான் எனது நண்பர் ஒருவரை அந்த சாமியாரிடம் சென்று பத்தாயிரம் பொற்காசுகளை கொடுத்து வருமாறு கூறுகிறேன்… அப்போது அந்த இடத்திற்கு நீங்கள் செல்லுங்கள் என்றார் பீர்பால்.

அடுத்த நாள் பீர்பாலின் நண்பர் சாமியாரைப் பார்க்கச் சென்றார்.சுவாமிகளே நான் வெளியூர் செல்ல இருக்கிறேன் இந்த பையில் பத்தாயிரம் பொற்காசுகள் உள்ளன. நான் வெளியூரில் இருந்து வந்த பின்பு தங்களிடமிருந்து வாங்கிக் கொள்கிறேன்…. என்றார்.

பத்தாயிரம் பொற்காசுகளை தரப்போவதாக கூறியதும் சாமியாருக்கு ஆசை வந்துவிட்டது. எப்படியும் அதையும் அபகரித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் முதலில் வேண்டா வெறுப்பாக பேசினார். அப்போது ஏற்கனவே ஆயிரம் பொற்காசுகளை பறிகொடுத்தவன் சாமியாரை பார்க்க வந்தார்.நீ ஏன் இங்கு வந்தாய் என்றார் சாமியார் கோபத்துடன். உங்களிடம் கொடுத்த ஆயிரம் பொற்காசுகளை வாங்கி கொண்டு போகலாம் என்று வந்தேன் என்றார்.

இந்த ஏழையிடம் ஆயிரம் பொற்காசுகளுக்காக சண்டைபோட்டால் பத்தாயிரம் பொற்காசுகளை இழக்க நேரிடுமே என்று எண்ணிய சாமியார் நான் மறைத்து வைத்திருந்த ஆயிரம் பொற்காசுகளை கொண்டு வந்து கொடுத்தார் சாமியார். அப்போது மரத்துக்குப் பின்னால் மறைந்திருந்த காவலாளிகள் சாமியாரை கையும் களவுமாய் பிடித்தார்கள். பதறிப்போன சாமியார் ஓட முயன்றார். அவரை கட்டிப்போட்டு உண்மையை ஒத்துக் கொள்ள வைத்தார்கள். மண்ணுக்குள் புதைந்து வைத்த ஆயிரம் பொற்காசுகளை தாம் எடுத்து கொண்டதை ஒத்துக் கொண்டார். சாமியார் வேடத்தில் இத்தனை நாட்களும் உலாவிக் கொண்டிருந்தவன் பெரிய கொள்ளைக்காரன் என்பது தெரிந்ததும் சிறையில் அடைத்தார்கள்.

காகங்களின் எண்ணிக்கை என்ன? அக்பர் பீர்பால் கதை

அக்பர் தமது பிரச்சனைகளுக்கு விடை காண பீர்பாலையே நம்பியிருப்பது அரச சபையில் இருந்த மற்ற அமைச்சர்களுக்கு வருத்தமாகவும் பொறாமையாகவும் இருந்தது. இது குறித்து அரசரிடம் எல்லோரும் ஒன்று கூடி கேட்டு விடுவது என தீர்மானித்தார்கள்.

Akbar Birbal
அரச சபை கூடியது, அரசே தாங்கள் எந்த பிரச்சனைக்கும் பீர்பாலையே எதிர் பார்க்கிறீர்கள். அமைச்சர்களாகிய எங்களை மட்டம் தட்டுவது போலவும், முட்டாள் ஆக்குவதாகவும் உள்ளது என்று அமைச்சர்கள் ஒன்றுகூடி மன்னரிடம் முறையிட்டார்கள்.

அமைச்சரின் குற்றச்சாட்டினைக் கேட்டு அரசர் சிரித்துக் கொண்டார். அமைச்சர்களே பீர்பாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம் அவரது அறிவாற்றலும் திறமையும், சாதுர்யமான பேச்சும் தானே தவிர தனிப்பட்ட முறையில் எந்த காரணமும் இல்லை. அவரது மதிநுட்பத்தை போற்றுகிறேன் அதனால் உங்கள் அனைவரையும் இழிவாக கருதுகிறேன் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளக் கூடாது. இன்னும் சிறிது நேரத்தில் பீர்பால் வந்துவிடுவார். உங்களுக்கு முன்னால் அவரை சோதிக்கிறேன். அவரது அறிவுத் திறமையை தெரிந்துக் கொள்ளுங்கள் என்றார் அக்பர்.

சிறிது நேரத்தில் பீர்பால் சபைக்கு வந்தார். அரசர் அமைச்சர்களுடன் மற்ற சில விஷயங்களை குறித்து விவாதித்தார். பிறகு திடீரென்று அரசர் அமைச்சர்களைப் பார்த்து நமது நாட்டில் மொத்தம் எத்தனை காகங்கள் உள்ளன என்பது யாருக்காவது தெரியுமா என்றார்?

 
நாட்டில் எத்தனை ஆறுகள் உள்ளன? மலைகள் உள்ளன என்று கேட்டால் கூறலாம். நாட்டில் உள்ள காக்கைகளின் எண்ணிக்கை யாருக்குத் தெரியும்? அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். யாருக்கும் விடை தெரியவில்லை.என்ன அமைச்சர்களே உங்களில் ஒருவருக்கும் விடை தெரியவில்லையா? என்றார் அரசர். பீர்பாலை பார்த்து நீங்களாவது பதில் கூறுங்கள் என்றார்.

அரசே நமது நாட்டில் மொத்தம் ஒரு லட்சத்து என்பத்தெட்டாயிரத்து முந்நூற்றி இருபத்து ஐந்து காகங்கள் இருக்கின்றன என்றார் பீர்பால்.அமைச்சர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது. காகங்களின் எண்ணிக்கையை பீர்பாலால் எப்படி கூற முடிந்தது? என்று வியந்து போனார்கள்.

தன்னை அறிவு ஜீவியாக நினைத்துக் கொண்டிருந்த அமைச்சர் ஒருவர் எழுந்தார்.பீர்பால் தாங்கள் கூறிய எண்ணிக்கையை விட கூடுதலான அளவில் காகங்கள் இருந்தால் என்ன செய்வது? என்றார்.அமைச்சர் பெருமானே… தாங்கள் கூறுவது உண்மையாக இருக்கலாம். நான் கூறிய எண்ணிக்கையை விட கூடுதலாக இருந்தால் வெளியூரிலிருந்து நமது நாட்டிற்கு சில காகங்கள் விருந்தாளியாக வந்துள்ளன என தெரிந்து கொள்ளலாம்.இன்னொரு அமைச்சர் பீர்பால் தாங்கள் கூறுவது போல் காகங்கள் அதிகமாக இருந்தால் விருந்தாளியாக வந்துள்ளன என்பது சரி, தாங்கள் கூறிய எண்ணிக்கையை விட காகங்கள் குறைவாக இருந்தால் என்ன செய்வது? என்று ஆணவத்துடன் கேட்டார்.அப்படியும் இருக்கலாம். நமது நாட்டில் உள்ள காகங்கள் வெளியூரில் உள்ள உறவுக்கார காகங்களைப் பார்ப்பதற்கு சென்றிருக்கும் என்றார் பீர்பால் சிரித்துக் கொண்டே.

அமைச்சர் அனைவரும் ஆச்சர்யத்தில் பதில் பேச முடியாமல் மெளனமாக இருந்தார்கள். அரசர் அமைச்சர்களை நோக்கினார். வெட்கத்தில் முகம் கவிழ்ந்து போனார்கள் அமைச்சர்கள்,

யமுனை நதி அழுவது ஏன்? அக்பர் பீர்பால் கதை

அக்பர் தமது மனைவியுடன் யமுனை நதிக்கரையில் அமர்ந்து யமுனையின் அழகினை ரசித்துக் கொண்டிருந்தார்.
பேகம்…… யமுனை நதியின் நீரோட்டத்தின் சல சலப்பு உன்னை அழகி அழகி என்று கூறிக்கொண்டே செல்வது போல் தோன்றுகிறது… இல்லையா பேகம் என்றார் கொஞ்சும் குரலில் ஆனால் அரசியாரோ அக்பர் கூறியதை மறுத்து உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது யமுனை நதியின் akbar-birbalசல சலப்பு ஒரு பெண் அழுது கொண்டிருப்பது போல தனது கண்களுக்கு தெரிகிறது. யமுனை அழுது கொண்டிருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.. என்றார் அரசியார். அக்பருக்கோ அதிர்ச்சியாக இருந்தது. ஏன் பேகம் உன் அழகைக் கண்டு பொறாமை பட்டு அழுது கொண்டிருக்கிறதோ? என்றார் அரசர்.அரசியாரின் முகம் வெட்கத்தால் சிவந்துபோனது.

அடுத்த நாள் அரச சபை கூடியதும் அமைச்சர்களிடம் தமது சந்தேகத்தை கேட்டார். யமுனை அழுது கொண்டிருப்பது போல் தோன்றுவதற்கு என்ன காரணம்? யாருக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பீர்பால் சபையில் மெளனமாக அமர்ந்திருந்தார். என்ன பீர்பால்…. நீங்கள் கூறுங்கள் யமுனை ஏன் அழுது கொண்டிருக்கிறது? என்றார் அக்பர். தமது வழக்க்கமான புன்சிரிப்புடன் தமது இருக்கையை விட்டு எழுந்தார் பீர்பால்.

அரசே இமயமலை தான் யமுனையின் தாயகம் – வங்க கடல் யமுனையின் புகுந்த வீடு எனக் கூறலாம். பிறந்த இடத்தை விட்டு பிரிந்து புகுந்த இடமான வங்கக் கடலை நோக்கி போக வேண்டியுள்ளதே என வேதனைப்பட்டு அழுது கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன் என்றார் பீர்பால்.தனது கேள்விக்கு சரியான விளக்கத்தை அளித்த பீர்பாலை மனமுவந்து பாராட்டினார் அக்பர். சபையில் இருந்த அனைவரும் பீர்பாலின் சாதுர்யமான பேச்சை கேட்டு ரசித்து தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்கள்.


Home | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us