கருவூரார் என்ற இச்சித்தரின் பெற்றோர் ஊர் ஊராகச் சென்று, ஆங்காங்கே இருந்த திருக் கோயில்களிலிருக்கும் பஞ்சலோகச் சிலைகளைச் செப்பனிட்டுக் கொடுத்தும் அல்லது புதுச்சிலைகளை வார்த்துக் கொடுத்தும் தொழில் செய்து தம் பிழைப்பை நடத்தி வந்தனர் என்று அகத்திய முனிவர் தம் பன்னிரெண்டாயிரம் என்ற பெருநூல் காவியம் நான்காவது காண்டம் 452 ஆவது பாடலில் கூறியுள்ளார்.

துணிந்துமே சிலைக்கருவு செய்ய வென்று
துப்புரவாய்க் குடிகளிட மார்க்கம் சென்று
மணியான மணியுடனே குடவன் தானும்
மன்னவனே நவலோகம் ஒன்றாய்ச் சேர்த்து
அணியான கருவுதனில் அமைத்துமே தான்
அப்பனே பிரதமைகள் உருவு செய்து
தணியான கருவுதனை விற்று உண்டு
சதா காலம் சீவனங்கள் செய்திட்டாரே
இட்டாரே கருவூரார் தந்தை தாய்மார்
எழில் பெரிய தேவதாஸ்தானங்கள் தேடி…..
என்று அகத்தியர் விளக்குகிறார். பிற நூல்களிலும் கருவூரார், செம்பு, பித்தளை போன்ற உலோகங்களைக் கொண்டு தொழில் செய்யும் குலத்தைச் சேர்ந்தவர் என்றே கூறப்பட்டுள்ளது. இவர் தம் மாணாக்கர் என்று போக முனிவரே தம் நூல்கள் பலவற்றில் கூறியுள்ளார்.

ஆனால், சிலர் கருவூர்த் தேவர் என்றழைக்கப்பட்ட சிவனடியாரின் வரலாற்றை இவர் மேலேற்றிக் கதைகள் புனைந்து கூறியதும் உண்டு. சரியாக ஆராய்ந்து அறியாத ஒரு சிலர் கருவூரார் என்றழைக்கப்பட்ட சித்தர் பிராமணர் குலத்தவர் என்று உரைக்கின்றனர். இவ்விருவருக்கும் உள்ள வேறுப்பாட்டை பலர் அறியவில்லை. அபிதான சிந்தாமணியில் கருவூர்த் தேவர் பற்றிக் கூறப்பட்டுள்ளதாவது….
கருவூரில் பிராமண குலத்தவராய்ப் பிறந்து, மெய்ஞ்ஞான நூலாய்ந்து சைவ சமய்த்தைக் கடைப்பிடித்துச் சிவயோக சித்தியை அடைந்து சாதி குலம் நீத்துச் சிவத்தல யாத்திரை செய்து திருவிசைப்பதிகம் பாடி வந்தார்.
பல தலங்களுக்குச் சென்று வந்த இவர் கஜமோட்சம் என்ற தலத்தை அடைந்து, அங்கிருந்த முன்றீசரை அழைக்க அப்பெருமானும் தரிசனம் தந்தருளி, என்ன வேண்டும் என்று வினவினார். கருவூர்தேவர் தமக்குக் கள் வேண்டும் என்று கேட்டார். உடனே முன்றீசர் காளிக்குக் கட்டளையிட, காளியும் தேவருக்கு மதுக்குடத்தை அளித்தாள். மேலும் தமக்கு மீன் வேண்டும் என்று தேவர் காளியிடம் கேட்டார். உடனே கோட்டவாசிகளிடம் காளி மீனைக் கேட்க அவர்கள் ஆறு, கடல் என்று எங்கு தேடியும் மீன் அகப்படாமை கண்டு கருவூர்த் தேவர் அங்கே இருந்த வன்னிமரத்தை உற்று நோக்கினார். உடனே அந்த வன்னிமரம் மீன் மாரிப் பொழிந்தது.
