பாம்பாட்டி சித்தர் வரலாறு பாகம் 2

பாம்பாட்டி சித்தர் வரலாறு பாகம் 1

அடுத்த நாள் அவன் மீண்டும் காட்டுக்குள் வந்தான். அவனெதிரே சில பாம்புகள் வந்தன. அவற்றையும் அவன் கொன்றான். காலப்போக்கில் அவன் பாம்புகளைக் கொல்வதைத் தன் பொழுது போக்காகவே கொண்டான். ஒருநாள் மருத்துவர்கள் சிலர் வந்து இவனைச் சந்தித்தனர். “தம்பி!! நவரத்தினம் போன்று ஜொலிக்கும் குட்டையான பாம்பு ஒன்றிருக்கிறது. அதன் தலைப்பகுதியுள் மாணிக்கம் இருக்கும். அப்பாம்பு இரவுப் பொழுதில் மட்டுமே நடமாடும். அதனுடைய விஷம் ஒரு மருந்துக்குத் தேவைப்படுகிறது. பாம்புகளை எளிதில் பிடிப்பவனான நீ அப்பாம்பைப் பிடித்துக் கொடு” என்றார்.

அதற்குச் சம்மதித்த இளைஞன் உடனே காட்டுக்கு விரைந்து சென்றான். கண்ணில் தென்பட்ட புற்றுகளை எல்லாம் இடித்து அப்பாம்பைத் தேடினான். ஆனால் அது அவனுக்குக் கிடைக்கவில்லை. அதனால் அப்பாம்பைத் தேடி மேலும் அவன் காட்டுக்குள் முன்னேறிச் சென்றான். சற்று நேரத்தில் எவரோ வாய் விட்டுச் சிரிக்கும் சிரிப்பொலி காடு முழுவதுமாக எதிரொலித்தது. அதுகேட்ட அவன், “யார் அது? சிரித்தது யார் ? எவராக இருந்தாலும் சரி…. என் முன்னே வா….. என்று உரக்கக் கத்தினான்.”

அப்போது ஒளியுடம்போடு சித்தர் ஒருவர் அவன் முன்பாக வந்து நின்றார். தன் எதிரே வந்து நின்றவரைக் கண்டதும் இளைஞன் வியந்தான். “இப்படியும் ஓர் உடம்பு இருக்குமா? என்று எண்ணியவாறு, நீங்கள் யார்? எதற்காக நீங்கள் சிரித்தீர்கள்? என்று வினவினான். அதற்க்கு அவர் “இளைஞனே! நான் சித்தர் பரம்பரையில் வந்தவன்! எதற்கும் உதவாத உன் செயலைப் பார்த்தேன். சிரிக்கத் தோன்றியது சிரித்தேன்” என்றார்.

சித்தர் கூறியதைக் கேட்ட இளைஞன், ஐயா… மாணிக்கக் கல்லைக் கொண்ட பாம்பைத் தேடி அலைவது பயனற்ற செயலா? என்று கேட்டான். அதற்கு அச்சித்தர், இளைஞனே…. பயம் என்னவென்றே தெரியாதவன் நீ.. வீரனான நீ விவேகம் இல்லாது இருக்கலாமா? உல்லாசமான உயர்ந்த ஒரு பாம்பு உன் உடம்பில் குடியிருக்கிறது. மனித உடம்புள் இருக்கும் அப்பாம்பை எவருமே அறியவில்லை. உனக்கும் தெரிய வில்லை. அதை ஆட்டுவிப்பவனே அறிஞன் ஆவான். அப்பாம்பை அடக்கி ஆளும் சிறப்பைப் பெற்றவர்களே சித்தர்கள். மற்றவர்கள் எல்லாரும் அப்பாம்புக்கு அடிமைப்பட்ட பைத்தியங்களே… என்றுரைத்துச் சிரித்தார்.

பயம் என்றால் என்னவென்றே அறியாத அந்த இளைஞன், முதன் முதலாக அச்சம் கொண்டு சித்தர் பெருமானை நோக்கினான். நடுக்கமுடன் அவரை வணங்க முயற்சித்தும் அவனால் இயலவில்லை. சட்டென அவரது பாதங்களில் வீழ்ந்து வணங்கியவன் “சுவாமி! எனக்குள் ஓர் பாம்பு உள்ளது என்ற தகவலை இன்றுதான் உங்களால் நான் அறிந்தேன். ஆனால் அது என்ன பாம்பு என்று எனக்குப் புரியவில்லை. தயவு கூர்ந்து எனக்கு அது பற்றி விளக்குவீர்களா?” என்று வேண்டினான்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *